Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday, 27 July 2017

அரசுப் பள்ளிக்கு டைல்ஸ் வாங்க வந்தீங்களா?’- ஒரு சிறந்த பள்ளியின் ஆசிரியர் அனுபவம்

ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்கத் தேவைப்படும் மெய்யியல் மற்றும் அதன் உட்கூறு உள்கட்டமைப்பு வசதிகள் எப்போது நிறைவாகிறதோ, அப்போதுதான் நீடித்த நிலைத்த வளர்ச்சியை நோக்கி நடைபோடும். இன்றைய காலத்தில் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைவு, அதன் சரியான உள்கட்டமைப்பு வளர்ச்சியின்மையால் தான் குறைந்துவருகிறது. இப்போக்கை ஆங்காங்கே ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசாங்கம் செய்கிற சில முன்னெடுப்பு நடவடிக்கைகள் மாற்றிக் காட்டுகின்றன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட ஊர் தான் காளாச்சேரி.  திருவாரூர் மாவட்டத்தின் 2016-17-ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான விருதை காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வென்றுள்ளது. கிராமத்துக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருதைப் பற்றியும், பள்ளியைப் பற்றியும் ஆங்கில ஆசிரியர் ஆனந்த் கூறுகையில்.,



”ஒவ்வொரு வருடமும் மாவட்டம்தோறும் சிறந்த பள்ளிகளைத் தமிழக அரசு தேர்ந்தெடுத்து விருது அளிக்கும்.  முதலில் விருதளிக்கத் தகுதியான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் குறித்த சுற்றுப்புறச்சூழல் கல்வி பயிற்றுவிக்கப்படும் முறை குறித்து ஆய்வு நடத்த கல்வித் துறை உயரதிகாரிகள் வருவார்கள்.

மாணவர்களிடம் திறனறி சோதனை பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆராய்ந்த பின்னரே இந்தப் பள்ளிக்கு சிறந்த பள்ளி விருதளிக்கலாம் என சான்றளிப்பர். அப்படித்தான் 2016-17-ம் கல்வியாண்டில் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியான எங்கள் பள்ளிக்கும் விருது கிடைத்தது.

பல அரசுப் பள்ளிகளிலும் கழிவறைதான் சரியானதாக இருக்காது. அதேபோல தான் எங்கள் பள்ளியிலும் அப்படித்தான் இருந்தது.  ஆனால், அதனைச் சரி செய்து மாணவர்களுக்கு அளிக்க முனைந்தோம்.

எங்கள் பள்ளி கழிப்பறைக்காக டைல்ஸ் வாங்க கடைகளுக்குச் சென்றிருந்தேன்.

தஞ்சாவூரில் உள்ள 3 டைல்ஸ் கடைகளுக்குச் சென்று விலையை விசாரித்தேன். மூன்று கடைகளிலும் டைல்ஸ் பார்த்துவிட்டு அதன் விலையை கேட்கும்போது, கடையின் விற்பனையாளர் ‘வீட்டிற்கு வாங்குகிறீர்களா?’ என்று கேட்டார்.

‘நான் பணிபுரியும் அரசுப் பள்ளிக்கு’ என்று கூறினேன்.  ‘அப்படியா! அப்போ உள்ளே சென்று பார்ப்போமா?’ என்று கூறிய விற்பனையாளர், ‘அரசுப் பள்ளியில் பயன்படுத்த பெரும்பாலான கான்ட்ராக்டர்கள் வாங்கும் டைல்ஸ் இவை’ என மிகவும் விலை குறைந்த தரமற்ற டைல்ஸ்களை காண்பித்தார்.

நான் கான்ட்ராக்டர் அல்ல அரசுப் பள்ளி ஆசிரியர் என்று கூறி, குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல டைல்ஸை தேர்வு செய்யும்போது மேலும் கீழுமாக பார்த்த விற்பனையாளர் நக்கலாக சிரித்தபடிதான் கொடுத்தார். நம் சமுதாயம் காலங்காலமாக அரசுப் பள்ளிகள் மீது வைத்திருக்கும் கரும்புள்ளியை அழிக்கச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது புரிந்தது.   

இது தூய்மை எனும் பிரிவின் கீழ் வரினும், இந்த அங்கீகாரம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. பள்ளி மாணவர்கள் தரமாக ஆங்கிலம் பேசவும், கணினியைக் கையாளவும் கற்றுக் கொடுத்திருக்கிறோம். மேலும், திறன் வகுப்பறை கொண்ட பள்ளியாக; பல பிரிவுகளிலும் நிறைவு பெற்ற; மேலும் சிறப்பாக இயங்கக்கூடிய இடத்திலே எங்கள் பள்ளி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவையே உள்கட்டமைப்பு வசதிகொண்ட சிறந்த நடுநிலைப்பள்ளியாக தேர்வு செய்யவைத்திருக்கிறது.”

சுத்தம் அதானே எல்லாம்.

No comments:

Post a Comment