Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 28 April 2016

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன.

இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள் வாதிட்டனர்.

இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு அமலுக்கு வந்தது.

இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்று, தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு உத்தரவினால் மாநிலம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன.

இந்தத் தீர்ப்பினை அடுத்து நாடு முழுதும் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment